கட்டுரை

நான் பார்த்த ஆப்கானிஸ்தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்

பாரதி மணி

1982-ஆம் ஆண்டு. கோடையில் ஒரு காலைவேளை. தில்லி விமான நிலையத்தில் செக்யூரிட்டி செக் முடிந்து விமானத்திலேற காத்திருக்கிறேன். ஒருமணி நேரமாகியும் அறிவிப்பு வரக்காணோம். ஒரு வழியாக விமானத்தில் ஏறச்சொன்னார்கள். அது Sukhoi விமானம். அறுபதுகளில் நாம் பார்த்த குதணீஞுணூ இணிணண்tஞுடூடூச்tடிணிண வகை. அதிகுயரமில்லாது இரு விசிறிகள் கொண்ட சின்ன விமானம்.

ரஷ்யாவின் தேசிய விமான சேவையை நடத்தும் Aeroflot Airways பல வருடங்கள் உபயோகித்தபின், அண்ணனின் பழைய சட்டையை தம்பிக்கு மாற்றுவதுபோல், ஆப்கானிஸ்தானின் Ariana Airline-இடம் தவிட்டுக்கு தாரை வார்த்த விமானங்கள்....அரதப்பழசு. பயணிகள் ஏறி அவரவர் இருக்கைகளில் அமர்ந்தோம். அரைமணி நேரமாகியும் விமானம் கிளம்புவதற்கான அறிகுறிகளேதுமில்லை. உள்ளே ஏ.சியும் வேலை செய்யவில்லை. புழுக்கத்தால் உடைகளெல்லாம் தொப்பலாக நனைந்து ஒரு மணி நேரம் நரகவேதனை. தாகத்துக்கு தண்ணீர் கொடுக்கவும் விமானப் பணியாளர் யாருமில்லை. அப்போது அவசரமேயில்லாமல் விமானத்தின் ரஷ்ய கேப்டன் நிதானமாக உள்ளே வந்தார். அவர் கைநிறைய பைகள். தில்லி கனாட் ப்ளேஸ், பாலிகா பஜார், சாந்தினி சௌக்கில் பொருட்களை வாங்கி காபூலில் மும்மடங்கு விலைக்கு விற்று சம்பாதிப்பது அவரது சைட் பிசினஸ். பின்னால் வந்த Air Hostesses கைகளிலும் அதே நோக்கத்துடன் வாங்கிய பைகள்! பயணிகள் ஒருசேரக் கூச்சலிட, ஒன்றுமே கேட்காததுபோல் நடந்துகொண்டார்கள். அவர்களுக்கு இதெல்லாம் தினசரி நிகழ்ச்சிகள். இரண்டரை மணிநேர தாமதத்துக்குப்பின் ஒருவழியாக விமானம் கிளம்பியது. விமானத்திலிருந்த பல

சர்தார்ஜிகள் மதுபானம் கேட்க, பணியாளர் பதில்: ‘எங்களிடம் மதுபானம் இல்லை. உங்களிடம் இருந்தால் சோடா ஐஸ் தருகிறோம்.'

விமானம் காபூல் சென்றடைந்தது. பயணிகளை அரைமணி நேரம் உள்ளேயே இருக்கும்படி உத்தரவு. விமானத்திலிருந்து இறங்கியதும் விமான நிலையத்தைத் தேடினேன். ஆனால் நான் பார்த்ததெல்லாம் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட சில கோடவுன்கள் தான். அதுதான் அப்போதைய காபூல் விமான நிலையம். (Hamid Karzai International Airport, Indo & Afghan Friendship Dam போன்றவை இந்திய நிதி உதவியுடன் பிறகு தான் உருவாயின). உருட்டிச் செல்ல சக்கரங்கள் உள்ள பெட்டிகள் வராத காலம். உடமைகளைச் சுமந்துகொண்டு வெயிலில் அரை பர்லாங் நடந்து ‘விமானநிலையத்தை' அடைந்தோம். உள்ளே இன்னும் அதிக புழுக்கம். Immigration Check செய்ய வரிசையில் காத்திருந்தேன். என் முறை வந்தபோது, அந்த அதிகாரி என் பாஸ்போர்ட்டை பிரித்து பார்த்துவிட்டு, 'Keep 5 Dollars in the Passport' என்றார். இவை மட்டும் தான் அவருக்குத் தெரிந்த ஆங்கில வார்த்தைகள். ஏதோ கட்டணமென்று நினைத்து நானும் 5 டாலர் வைத்தேன். (உலகத்திலேயே ஊழலில் தலைசிறந்து விளங்குவது ஆப்கானிஸ்தானும் நைஜீரியாவும் மட்டுமே!) அதை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, ஸ்டாம்ப் போட இங்க்பேடை எடுத்தார்... காய்ந்திருந்தது. ட்ராயரிலிருந்து ஒரு மைக்குப்பியை தேடி எடுத்து பேடில் ஒழுங்கில்லாமல் விட்டார். அவர் போட்ட முத்திரை பாஸ்போர்ட்டின் இரு பக்கங்களை மையால் குளுப்பாட்டியிருந்தது. (அந்த பழைய Cancelled பாஸ்போர்ட் இன்னும் இருக்கிறது!)

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். வழக்கமான பரபரப்பு, டாக்சி, கார், ஜனங்கள் ஏதுமில்லை... வெறிச்சோடியிருந்தது. பிர்லாவில் என்னோடு வேலை பார்த்த நண்பன் V.U.K மேனன் அப்போது காபூலில் அரியானா ஏர்லைன்ஸில் அதிகாரியாக இருந்தான். என்னை அழைத்துப்போக விமானநிலையம் வருவதாக சொல்லியிருந்தான். அவனை எங்கே தேடுவது? அங்கு தென்பட்ட ஓரிரு காவலாளிகளிடம் கேட்டேன். அவர்களுக்குத் தெரிந்த அரைகுறை உருதுவிலும் கால்குறை ஆங்கிலத்திலும் நான் தெரிந்துகொண்டது: ‘விமானநிலையத்துக்குள் யாருக்கும் அனுமதியில்லை.... இங்கிருந்து ஒரு பர்லாங் நடந்தால் வெளி கேட் வரும். அங்கே அவர் காத்திருக்கலாம்' என்பது தான். மறுபடியும் சக்கரமில்லாத பெட்டிகளை தூக்கிக்கொண்டு நடந்தேன்... நடந்தேன். தலைக்குமேலே சில ஹெலிகாப்டர்கள் பறந்தன. அவற்றிலிருந்து அவ்வப்போது பெரிய மத்தாப்பு போல வெளிச்சம்

சிதறிக்கொண்டிருந்தது. தரையிலிருந்து வரும் ராக்கெட் தாக்குதல்களிலிருந்து தப்ப இது உதவுமாம். கேட்டை நெருங்க, ‘எடோ... மணி!' என்ற குரல் கேட்டது.

மேனனுக்கு பெரியவீடு கொடுத்திருந்தார்கள். தன் மனைவி பார்கவியையும், பத்துவயது மகள் அம்மிணியையும் அறிமுகப்படுத்தினான். பப்படம் பாயசத்துடன் நல்ல மலையாளி சத்யா. நன்றாக தூங்கினேன்.

மாலையிலும் பெரிய விருந்து. எனக்குப்பிடித்த Royal Salute Bottle ஒன்று உடைபட்டது. தில்லிப் பழங்கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். மேனன் தன் மகளிடம், ‘மோளே!... மணி அம்மாவனு கொறச்சு பழங்கள் எடுத்தோண்டுவா!' என்றான். நம் வீடுகளில் உடனே ஃப்ரிஜ்ஜை திறந்து எடுப்பார்கள்.... இல்லை... வாங்கி வைத்ததை தருவார்கள். அம்மிணி ஒரு பிரம்புக்கூடையும் கத்திரியுமாக வந்தாள். ‘மணி அங்கிள்! என்றெகூட வருமோ?... எனிக்கு தனிச்சு போகான் பேடியாணு!' என்று சொல்லிக்கொண்டே பின்கதவைத் திறந்து விளக்கைப்போட்டாள். நானும் கூடப்போனேன். பெரிய வராந்தா... மேலே பார்த்தால் ஆகாயம் தெரியாமல் நூற்றுக்கும் மேலான விதையில்லாத திராட்சைப் பழக்கொத்துக்கள் தொங்கின. உள்ளிருந்து மேனன், ‘மோளே, இடது வசத்தீந்நு மூநாமத்தெ குல எடுக்கூ. நல்ல பழுத்ததா!' என்றான். அம்மிணி ஒரு ஸ்டூலைப்போட்டு ஏறி அந்த திராட்சைக்குலையை கத்தரிக்கோல் மூலம் கத்தரித்தாள். ஒரு படி இறங்கி கீழே போய் ஒரு மரத்திலிருந்து சில பழங்களை கத்தரித்தெடுத்தாள். வெளிச்சத்தில் பார்த்தபோது அவை ஆரஞ்சுப்பழங்கள். மற்றொரு மரத்திலிருந்து பறித்தது ஜாம்பக்காய் போல ஒரு பழம். இன்னும் ஓரிரு பெயர் தெரியாத பழங்கள்! எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மறுநாள் காலை பார்த்தபோது தோட்டம் முழுதும் விதவிதமான பழச்செடிகள்... மரங்கள். முதலும் கடைசியுமாக ஒருவர் வீட்டுக்கொல்லையிலிருந்து பறித்த திராட்சைப்பழங்களை சாப்பிட்டேன்! காபூலின் மண்வாசி அப்படி. உண்மையிலேயே பொன்விளையும் பூமி.

நான் முதல்முறை காபூல் வந்தது 1982&இல்.இன்னொரு முறையும் போயிருக்கிறேன், அப்போது ரஷ்யாவின் மேற்பார்வையில் பாப்ரக் கர்மால் ஆப்கானிஸ்தான் தலைவராக இருந்தார். டம்மி பீஸ். ரஷ்யா தான் அங்கே எல்லாம்.

அவர்களது வருஷாந்திர Newsprint, Glazed Paper தேவைகளுக்கான டெண்டர். Russian Newsprint and Swedish & Paper Association நான் தான் இந்தியன் ஏஜெண்ட். நான் தில்லியில் விமானமேறு முன்பே எல்லாம் நிச்சயமாகி இருந்தது. என்ன விலையில் எத்தனை டன், யார் யாருக்கு எத்தனை (ஊழல் என்ற பெயரில்) கமிஷன், எனக்கான லாபம் எல்லாமே முடிவாகிவிட்டது. Tender Formalities போகவேண்டும். சின்ன கான்ட்ராக்ட் என்பதால் ரஷ்யர்கள் அதை என்னிடம் தள்ளிவிட்டார்கள். எனக்கு மலையாள பழமொழிப்படி, ‘எள்ளோளம் திந்நால் எள்ளோளம் பசி தீரும் - எள்ளளவு தின்றால் அந்தளவு பசி தீரும்' பாலிஸி! ஒரு நாட்டை சுற்றிப் பார்த்த மாதிரியும் ஆச்சு! நான் சற்று வேறு மாதிரி. உலகம் சுற்றுபவர்கள் லண்டன், பாரீஸ், சிங்கப்பூர், டோக்யோ என்று பெரிய நகரங்களை மட்டும் பார்த்திருப்பார்கள். நான் இதோடு பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, கென்யா, ருமானியா, ப்ராக், வார்ஸா என்று சிறிய நாடுகளுக்கும் போயிருக்கிறேன்

காபூலில் என் சகலதேவைகளையும் கவனித்துக்கொள்ள அமீன்ஸாய்(Aminzai), தொழிலதிபர். நாட்டின் பத்து பெரிய செல்வந்தர்களில் அவரும் ஒருவர். அவரது தனி விருந்தினர் விடுதியில் வாசம். ஒருவாரம் ஊரை சுற்றிப்பார்த்துவிட்டு, அம்மாவுக்கு அரைக்கிலோ பால் காயமும், (என் அம்மா ஒரு பால்காயப்ரியை. அந்தக் காலத்தில் தெருவில் வரும் காபூலிவாலாவிடம் பால்காயம் வாங்கினதைப் பற்றி சொல்லியிருக்கிறாள்) குழந்தைகளுக்கு மார்க்கெட்டிலிருக்கும் அத்தனை பாதாம், பிஸ்தா, முந்திரிபருப்பு வகைகளை கொள்ளையடித்து செல்லவேண்டுமென்பது திட்டம். உங்களுக்குத் தெரியுமோ? இரு ஆண்டுகளுக்குமுன் ஏதோ காரணங்களுக்காக இந்தியாவுக்கான ஏற்றுமதியை தடுத்திருந்தார்கள். இந்தியாவுக்கு வரும் பால் காயத்தில் 95% ஆப்கானிஸ்தானத்திலிருந்து வருகிறது. (அந்தச் சமயம் L.G. பெருங்காயம், இன்னபிற P.S.N.V.S., P.G., O.C பெருங்காயக்காரர்கள் டிவியில் டெல்லி கணேஷ் மற்றும் மாமிகள் மூலம் பெருங்காயம் என்று சொல்லி விற்றது 95% சுத்த கோதுமை மாவு என்பது பலருக்குத் தெரியாது. நாம் வாங்கும் கூட்டுப்பெருங்காயம் Compound Asafoetdaவில் 95% கோதுமைமாவு-5% பால்காயம்).அந்த ஏற்றுமதித் தடையை விலக்கியதும் முதலில் இந்தியாவுக்கு ஏற்றுமதியான ஒரே பொருள் ஒரு ஏர் இந்தியா கார்கோ விமானம் நிறைய பால் பெருங்காயம் தான். எத்தனையோ மில்லியன் டாலர் விலையென்று

சொன்னார்கள். தங்கத்தின் விலை. ஏற்றுமதியிலேயே ஒற்றை கன்ஸைன்மெண்ட் விலையில் அது ரிக்கார்டு என்றும் சொன்னார்கள். என்னைப் போன்ற நாக்கு நாலுமுழம் உள்ளவர்களும் நம்மவூர் ஊறுகாய், சாம்பார் ரசப்ரியர்களும் காபூலிவாலாக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ரவீந்திரநாத் தாகூரின் காபூலிவாலாவிடம் விற்பதற்கு நிறையவே பால்காயம் இருந்தது.

ஒருநாள் பாமியான் பள்ளத்தாக்கில் இருந்த புகழ்பெற்ற இரு புத்தர் சிலைகளை பார்க்கப் போனோம்.

கி.பி. 681-இல் பாறைகளில் செதுக்கப்பட்ட வெவ்வேறு சைஸில் இரு புத்தர் சிலைகள். பிரும்மாண்டமான காட்சி. 2001&இல் தாலிபான் தடியர்கள் இந்தச் சிலைகளை துப்பாக்கியால் துளைத்தெடுத்துவிட்டார்கள். ஒரு சரித்திரச் சின்னம் சுத்தமாக காணாமல் போய்விட்டது. டிவியில் பார்த்ததும் ஒருதுளி கண்ணீர் தான் விடமுடிந்தது! இன்னொருநாள் காரில் ஜலாலாபாதுக்கும் கந்தஹாருக்கும் போய்வந்தேன். தாலிபான் தொந்தரவு இருக்கும் என்றார்கள்..... நல்லவேளை.... இல்லை.

அமீன்ஸாய் என்னோடு நெருக்கமாகிவிட்டார்.அத்தனை மரியாதை, நான் காபூலில் இருக்கும் வரை அவரும் சைவ உணவே சாப்பிட்டார். எத்தனை கெஞ்சியும் கேட்கவில்லை. அவர் எனக்கு என் பங்களாதேஷ் நண்பர் ஷாஜஹானை நினைவுபடுத்தினார். ஒருநாள் நான் அமீன்ஸாயுடன் இருந்தபோது ஒருவர் அவரை பார்க்க வந்திருந்தார். அவர் காபூலியில் எதோ

சொன்னார். வந்தவர் என்னை தலையிலிருந்து கால் வரை பார்த்தார். பின் விடைபெற்று கிளம்பினார். மாலையில் என் அறை அழைப்புமணி ஒலித்தது. திறந்து பார்த்தால் அவரே தான். கையில் ஒரு பை. ‘ஸாப் இதை உங்களிடம் கொடுக்கச்சொன்னார்' பிரித்துப்பார்த்தால் காபூலிகள் அணியும் இரு குர்த்தா பைஜாமா செட். அளவெடுத்து தைத்ததுபோல் உயர்ந்தரக துணியில் அவர்களுக்கே உரிய சாக்லேட் கலரில். இவர் அமீன்சாயின் தையற்தொழிற்சாலையின் தலைவர். என்னை அளவெடுக்காமல் கண்ணால் பார்த்தே என் உடைகளை தைத்தவர். பிறகுதான் ஞாபகம் வந்தது. அமீன்சாயுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ‘உங்கள் உடை எனக்கு பிடித்திருக்கிறது.

வாட்ட சாட்டமான உங்கள் உடலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது!' என்று சொல்லியிருந்தேன். அதை நினைவு கூர்ந்து செயல்படுத்திவிட்டார். அது பலமுறை என் வீட்டில் விரும்பி உடுத்தும் உடையாகவும் இருந்தது. என் காலனியில் குடியிருந்த ஆப்கானிஸ்தான் அகதியொருவர் ‘தில்லியிலும் இந்த மாதிரி தைக்கும் தையற்காரர்கள் உண்டா?' எனக்கேட்டார்.

காபூல் நகரில் எந்த இடத்திலும் கார் பார்க் பண்ணமுடியாது.... கார் வெடிகுண்டுகளுக்கு பயந்து. அரசாங்க காரியாலயங்களுக்குப் போனால், ‘மீட்டிங் முடிய ஒருமணி நேரமாகும்' என்று டிரைவரிடம்

சொல்லிவிடுவேன். அந்த ஒருமணிநேரமும் அவர் அந்த கட்டடத்தை சுற்றிச்சுற்றி வருவார். சில சமயம் மீட்டிங் 10 நிமிடத்தில் முடிந்துவிடும். டிரைவரைக் கூப்பிட செல்போன் கிடையாது. அவர் கிரிவலம் போல ஒருமணி நேரம் சுற்றிவிட்டுத்தான் வருவார். நல்லவேளை அப்போது பெட்ரோல் விலை ஏழு ரூபாய் தான்....இன்று போல் நூறைத்தாண்டவில்லை.

கோவிட்&19 போல தாலிபான்களும் காபூலுக்கு உள்ளேயும் வெளியேயும் இரண்டறக்கலந்திருந்தார்கள். எப்போது எங்கே வெடிக்குமோவென்ற அச்சத்திலேயே காபூல்வாசிகள் தினமும் உறங்கப்போனார்கள். அம்மணியும் எல்லா இரவுகளிலும் தன் தந்தையிடம், ‘அச்சோ!... நாளக்காலத்து காணான் பற்றுமோ?' என்று கேட்டுவிட்டுத்தான் உறங்கப்போனாள்..

தில்லி திரும்புவதற்கு முந்தையதினம் அமீன்சாயின் Kabul's biggest Carpet Manufacturing Factory போனேன். பெரிய பெரிய விலையுயர்ந்த கம்பளங்கள். ‘எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்!' என்றார். ஆனால் அரியானா ஏர்லைன்ஸின் Excess Baggage கட்டணமும் தில்லியின் Customs Duty-யும் என்னை பயமுறுத்தியது. பிறகு மூன்று சிறிய.. ஆனால் விலையுயர்ந்த... கம்பளங்களை தூக்கிச்செல்ல வசதியாக பிடியோடு பேக் செய்து தந்தார். அதில் ஒன்று என்னிடமிருக்கிறது. மீதி இரண்டை புதிதாக வீடு கட்டிய இரு நண்பர்களுக்கு பரிசளித்துவிட்டேன். திரும்பி வரும்போதும் பாஸ்போர்ட்டில் DEPARTURE முத்திரை குத்த ஐந்து டாலர் மொய்யெழுத வேண்டிவந்தது!

இப்பேர்ப்பட்ட காபூலையும் ஆப்கானிஸ்தானையும் 20 வருடங்கள் கட்டிக்காத்தன அமெரிக்காவும் மற்ற வல்லரசுகளும். அதை White House என்ற நந்தவனத்துக்குள் புதிதாக வந்த பைடன் எனும் ஆண்டி இருபதே நாளில் போட்டுடைத்தார்!

Afghanistan is a Land - Locked countryஅவர்கள் ஏற்றுமதி&இறக்குமதி வர்த்தகத்துக்கு இந்தியாவின் உதவி எப்போதும் தேவை. தாலிபான்களால் நம்மை விரோதித்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கு

நாட்டுக்கு உள்ளேயும் எதிரிகள்.... வெளியேயும் எதிரிகள் சொந்த மக்கள் வெகுண்டெழுந்தால் அங்கேயும் நல்லாட்சி நடக்காது. ஆப்கானிஸ்தானில்ஆக்கபூர்வமாக பல நலத்திட்டங்கள் நம்நாட்டு நிதி உதவியால் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. Now we can play only 'Wait and watch' game!

ஆப்கானிஸ்தானுக்கு விமோசனம் வருமா?

செப்டம்பர், 2021